இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு
தற்போது வரை எரிபொருள் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்குகளின் மேம்பாட்டிற்காக சென்னையில் இயங்கி வரும் அதன் தொழிற்சாலையில் பிரத்தியேகமாக ஒரு தளத்தை எலெக்ட்ரிக் பைக் மேம்பாட்டிற்காகவே அளித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி L1A மற்றும் L1K என்ற குறியீட்டுப் பெயர்களில் இரண்டு பைக்குகளை உருவாக்கி வருகிறது அந்நிறுவனம். இவற்றுள் ஒரு பைக்கானது எடை குறைவாக தினசரி பயன்பாட்டை முன்வைத்தும், மற்றொரு பைக்கை நீண்ட தூர மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் அநநிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
L1A எலெக்ட்ரிக் பைக்:
L1A என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் பைக்கையே தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. குறைவான எடையைக் கொண்டிருக்கவிருக்கும் இந்த பைக்கில் 'Flying Flea' என்ற தங்களுடைய பழமையான சின்னத்தையும் பயன்படுத்தவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. Flying Flea சின்னமானது, முதலாம் உலகப்போரின் போது பிரிட்டனில் ராயல் என்ஃபீல்டு தயாரித்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னமாகும். இந்த சின்னம் பொறித்த பைக்குகளை எதிரியுடைய பகுதியில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழிறக்கி பயன்படுத்தியிருக்கின்றனர் ராணுவத்தினர். அந்த அளவிற்கு மிகவும் குறைவான எடையுடன் அந்த பைக்குகளை தயாரித்திருந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஒற்றை சீட்டை மட்டுமே கொண்டிருக்கவிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அடுத்த ஆறு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு.
L1K எலெக்ட்ரிக் பைக்:
L1K என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் 350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இணையான பவரைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். நிலையான 9kW பவருடன், அதிகபட்சமகா 16kW பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரை புதிய பைக்கில் அளிக்கவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவரை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஆண்டுக்கு 60,000 எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தை வைத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு, 2026ம் ஆண்டிற்குள் இந்த அளவை இருமடங்காக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.