2025-ல் 750சிசி பைக்குகள் அறிமுகம், புதிய திட்டத்தில் ராயல் என்ஃபீல்டு
350சிசி, 450சிசி மற்றும் 650சிசி பைக்குகளையடுத்து 750சிசி பைக்குகளையும் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். 750சிசி பைக்குகளுக்காகவே R என்ற குறியீட்டுப் பெயரில் புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றைத் உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு, அந்த பிளாட்ஃபார்மில் R2G என்ற குறியீட்டுப் பெயரில் புதிய 750சிசி பாபர் ஒன்றையும் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அது இப்போது இல்லை, 2025-ம் ஆண்டு தான். மேலும், அதே ஆண்டில் தான் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் பைக்கையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய 750சிசி பைக்கை தயாரிக்கும் முன் அது குறித்த ஆய்வை தங்களது முக்கிய ஆட்டோமொபைல் சந்தைகளான, இந்தியா, வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டின் திட்டம் என்ன?
ப்ரீமியம் பைக் தயாரிப்பாளர்களான ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் தங்களுடைய புதிய மிட்சைஸ் பைக்குகளோடு எண்ட்ரி கொடுத்திருக்கின்றன. இந்நிலையில் தான், உலகளவில் மிட்சைஸ் பைக் செக்மெண்டில் வழுவான இடத்தைக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 750சிசி பைக்குகளோடு தங்களுடைய மிட்சைஸ் போர்ட்ஃபோலியோவை இன்னும் மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. 350, 450, 650 மற்றும் 750 என அனைத்து செக்மெண்ட்களிலும் பல விதமான பைக்குகளை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஏற்கனவே, 650சிசி செக்மெண்டில் பல புதிய பைக்குகளை அந்நிறுவனம் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 750சிசி பைக்குகளை வளர்ந்த ஆட்டோமொபைல் சந்தைகளான ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய சந்தைகளிலேயே ராயல் என்ஃபீல்டு முதலில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.