புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய பிராண்டின் கீழ் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதனை ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சித்தார்த் லாலும் உறுதி செய்திருக்கிறார்.
ஸ்டார்க் ப்யூச்சர் என்ற ஸ்பெயினைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு.
ஸ்டார்க் ப்யூச்சர் நிறுவனத்தின் 10.35% பங்குக்கு ரூ.439 கோடியை முதலீடு செய்து அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு கைகோர்த்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
தாங்கள் புதிதாக தயாரித்து வரும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவிற்கானதாக மட்டும் இல்லாமல் உலகளவில் அனைத்து நாடுகளில் விற்பனை செய்யும் வகையில் தயாரித்து வருகிறது அந்நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டு
என்ன திட்டம்.. எப்போது வெளியீடு?
புத்தம் புதிதாக ஒரு தளத்திற்குள் நுழைகிறோம் எனும் போது அதற்கான நேரமும் தேவைப்படும் தானே. எனவே, புதிய பைக்கை தயாரித்து சோதனை செய்து இறுதியாக 2025 அல்லது 2026-ல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை முழுவதுமாக தங்கள் நிறுவனத்தின் மூலமே தயாரிக்கவிருக்கிறது. தங்களுடைய எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிப்பதற்கென்றே தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை ஒன்றையும் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டின் L பிளாட்ஃபார்மில் தயாரிக்கவிருக்கும் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கு L1C எனக் கோடு நேம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
முதற்கட்டமாக வருடத்திற்கு 5,000 பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். எலெக்ட்ரிக் பைக் குறித்த திட்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனமே வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.