புதிய தொழிற்சாலை, எலெக்ட்ரிக் பைக்குகள்.. ராயல் என்ஃபீல்டின் அடுத்த திட்டம்!
முதலில் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதிய பல மாடல்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்கி வருகிறது. இனி வரும் காலங்களில் இன்னும் பல புதிய மாடல்களை தங்கள் லைன்அப்பில் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஏற்கனவே வல்லம் வடகால், ஒரகடம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தங்களது தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியிருக்கிறது. தற்போது செய்யாறில் புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய தொழிற்சாலையில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகிய இரண்டு வகைகளையும் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதற்காக 1000 - 15000 கோடி வரை முதலீடு செய்ய முடிவுசெய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் புதிய திட்டம்:
இதுவரை பெட்ரோல் டீசல் வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ராயல் என்ஃபீல்டு, வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்தவிருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தங்கள் பைக்குகளைப் போல இல்லாமல், அடிப்படையில் இருந்து புதிதாக ஒரு எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது அந்நிறுவனம். இதற்காகவே எலெக்ட்ரிக் பைக் உற்பத்திக்கான புதிய ப்ளாட்ஃபார்மையும் கட்டமைத்து வருகிறது. செய்யாறில் கட்டப்படும் புதிய தொழிற்சாலையும், ராயல் என்ஃபீல்டு பிராண்டின் புதிய எலெக்ட்ரிக் பைக்குக்கும் 2025-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த புதிய எலெக்ட்ரிக் என்ஃபீல்டை 100-150 கிமீ ரேஞ்சு வரை கொண்ட பைக்காக தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது RE.