Page Loader
FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?
FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட்

FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 25, 2023
03:19 pm

செய்தி முன்னோட்டம்

FAME II திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.50.02 கோடியாக திரும்பச் செலுத்தியிருக்கிறது, ஹரியானாவைச் சேர்ந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம். FAME II திட்டத்தின் கீழ் மானியம் பெற, குறிப்பிட்ட நிறுவனமானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகன பாகங்களையே பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து வரும் 13 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் இந்த விதிமுறையை மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது கனரக தொழிற்துறை அமைச்சகம். இதனைத் தொடர்ந்து, FAME II திட்டத்தின் விதிமுறைகளை மீறியது குறித்து குறிப்பிட்ட 7 நிறுவனங்களுக்கும் கனரக தொழிற்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், ரிவோல்ட் நிறுவனம் மட்டும் தற்போது அத்திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தொகையை திரும்பச் செலுத்தியிருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக்

மற்ற நிறுவனங்கள் எவை? 

ரிவோல்ட்டைத் தவிர்த்து, ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோடெக், ஆம்பியர் வெஹிக்கில்ஸ், பென்லிங் இந்தியா, அமோ மொபிலிட்டி மற்றும் லோகியா ஆட்டோ ஆகிய நிறுவனங்களும் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள், தாங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டே வாகனங்களைத் தயாரித்திருப்பதாகக் கூறி வரும் நிலையில், அதற்குத் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சில வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலக்கெடுவுக்குள் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை அல்லது மானியத்தொகையை திரும்பச் செலுத்தவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் கனரக தொழிற்துறை இணை செயலாளர் ஹனிஃப் குரேஷி. மேற்கூறிய நிறுவனங்கள் FAME II விதிமுறைகளை மீறி தவறான முறையில் ரூ.469 கோடி வரை மானியம் பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.