தினமும் 38 லட்சம் கிலோ CO2 குறைப்பு! இந்தியாவில் பிஎம் இ-டிரைவ் திட்டத்தால் நிகழும் பிரம்மாண்ட சுற்றுச்சூழல் புரட்சி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சார்ஜிங் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசால் ரூ.10,900 கோடி நிதியில் தொடங்கப்பட்ட பிஎம் இ-டிரைவ் (PM e-DRIVE) திட்டம் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. செப்டம்பர் 26, 2026 நிலவரப்படி, இத்திட்டம் மற்றும் அதற்கு முந்தைய இஎம்பிஎஸ் (EMPS) திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 34.18 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் பெட்ரோலிய இறக்குமதி சுமை கணிசமாகக் குறைந்து வருகிறது.
எரிபொருள் சேமிப்பு
தினசரி 31.3 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிப்பும் கரியமில வாயு குறைப்பும்
மின்சார வாகனங்களின் எண்ணிக்கைக் அதிகரிப்பால் இந்தியாவில் நாள்தோறும் சுமார் 31.3 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுவதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
இது தினமும் சராசரியாக 2.4 லட்சம் மோட்டார் சைக்கிள்களுக்கு முழுமையாக எரிபொருள் நிரப்புவதற்குச் சமமாகும்.
அதேபோல், இந்த வாகனங்கள் மூலம் நாள்தோறும் 38.5 லட்சம் கிலோ கரியமில வாயு (CO2) உமிழ்வு தடுக்கப்படுகிறது.
இந்த அளவிலான நச்சு வாயுவை உறிஞ்சுவதற்கு ஒரே நாளில் சுமார் 6.4 கோடி வளர்ந்த மரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார இரு சக்கர வாகனங்கள்
மின்சார இரு சக்கர வாகனங்களின் ஆதிக்கமும் பிற வாகனங்களின் பங்களிப்பும்
பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மின்சார வாகனங்களில் இருசக்கர வாகனங்களே மிக அதிகப் பங்களிப்பை அளித்துள்ளன.
சுமார் 31.19 லட்சம் இரு சக்கர வாகனங்கள் (91 சதவீதம்) பதிவாகியுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக 2.88 லட்சம் முச்சக்கர ஆட்டோக்கள் (8.4 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 11,121 மின்சார ரிக்ஷாக்கள் மற்றும் 236 மின்சார சரக்கு லாரிகளும் இத்திட்டத்தின் கீழ் சாலைகளில் இயங்கி வருகின்றன.
குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் எளிமையான பயன்பாடு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களை நோக்கி அதிகளவில் மாறி வருகின்றனர்.
மின்சார ஆம்புலன்கள்
அவசர மருத்துவத் துறைக்கு விரிவாக்கம் மற்றும் புதிய மின்சார ஆம்புலன்ஸ்கள்
மின்சார வாகன மாற்றத்தை அவசர மருத்துவ சேவைகளுக்கும் விரிவாக்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் 3,811 மின்சார ஆம்புலன்ஸ்களைக் களமிறக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பைத் தொடங்கியுள்ளன.
உதாரணத்திற்கு, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல டிராவலர் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரே சார்ஜில் 235 கிமீ தூரம் பயணிக்கக்கூடிய புதிய மின்சார ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது