Loading...
பெட்ரோல் கார்களுக்குப் பதில் டீசல், இவி! E20 எத்தனால் பயத்தால் மாறும் இந்திய வாகன சந்தை
இந்தியாவில் பெட்ரோல் கார் விற்பனை சரிவு

பெட்ரோல் கார்களுக்குப் பதில் டீசல், இவி! E20 எத்தனால் பயத்தால் மாறும் இந்திய வாகன சந்தை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
12:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பயணிகள் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் எரிபொருள் விருப்பத்தேர்வுகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. இந்திய வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள புதிய சில்லறை விற்பனைத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோல் மற்றும் எத்தனால் கார்களின் சந்தைப் பங்கு 41.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 43.15 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 47.62 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எத்தனால் கலப்பு பெட்ரோலால் எஞ்சினுக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற நுகர்வோரின் சந்தேகமே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மாற்று எரிபொருள்

டீசல் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களின் எழுச்சி

பெட்ரோல் வாகனங்களின் விற்பனை குறைந்த அதே வேளையில், டீசல் கார்களின் சந்தைப் பங்கு ஜூன் மாதத்திலிருந்த 16.32 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 17.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் சிஎன்ஜி கார்கள் 24.67 சதவீதப் பங்கையும், ஹைப்ரிட் கார்கள் 8.02 சதவீதத்தையும், மின்சார வாகனங்கள் 7.90 சதவீதப் பங்கையும் பெற்றுள்ளன.

சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் இ-வி கார்கள் அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தப் பயணிகள் வாகனச் சந்தையில் 40.59 சதவீதத்தைப் பிடித்துள்ளன.

இது பிரதான பெட்ரோல் கார்களின் சந்தைப் பங்கிற்கு மிக அருகில் வந்துள்ளது வாகனத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதிய சாதனை

மின்சார வாகனப் பிரிவில் புதிய சாதனை

மறுபுறம், இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 3,27,901 மின்சார வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்திய வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் விகிதம் 12.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2025 ஜூலை மாதத்தில் இந்த விகிதம் 9.6 சதவீதமாக மட்டுமே இருந்தது.

E20 பெட்ரோல் குறித்த குழப்பங்களால் வாடிக்கையாளர்கள் மாற்றுப் பயண தேர்வாக மின்சார வாகனங்களை அதிகளவில் விரும்பத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

விற்பனை

பண்டிகைக் கால விற்பனையும் தெளிவான வழிகாட்டுதலின் தேவையும்

ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தப் பயணிகள் வாகனச் சந்தை 4,16,555 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 19.13% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முதல்முறையாக ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 4 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

இருப்பினும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பெட்ரோல் வாகனங்களின் விற்பனையை சீரமைக்க, E20 எத்தனால் எரிபொருளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் அரசும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என FADA வலியுறுத்தியுள்ளது.

வரும் மாதங்களில் இந்த மாற்றம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெளிவாகத் தெரியும்.

ADVERTISEMENT