ஓலா S1 ஏர் மாடலின் விலையை உயர்த்தவிருக்கும் ஓலா
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான S1 ஏரை அறிமுகப்படுத்தியது ஓலா. ஏற்கனவே, தங்களது S1 லைன் அப்பில், 'S1' மற்றும் 'S1 ப்ரோ' ஆகிய இரண்டு மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. அதனைத் தொடர்ந்து 'S1 ஏர்' என்ற பட்ஜெட் மாடலை மூன்று பேட்டரி வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தியது ஓலா. S1 ஏரின், 2kWh பேட்டரி கொண்ட மாடலை ரூ.84,999 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 3kWh பேட்டரி கொண்ட மாடலை ரூ.99,999 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 4kWh பேட்டரி கொண்ட மாடலை ரூ.1.09 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். FAME-II மானியத்தை மத்திய அரசு குறைத்த போதும், இந்த மாடல்களின் விலையில் ஓலா மாற்றம் செய்யவில்லை.
உயரும் S1 ஏரின் விலை:
சில மாதங்களுக்கு முன்பே S1 ஏர் மாடலின் முன்பதிவை ஓலா துவக்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டெலிவரிக்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இந்நிலையில், வரும் ஜூலை 30-ம் தேதிக்கு ஓலா S1 ஏர் மாடலை முன்பதிவு செய்பவர்கள் அறிமுக விலையான ரூ.1.09 லட்சத்திலேயே முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவித்திருக்கிறது ஓலா. ஜூலை 31-க்குப் பிறகு முன்பதிவு செய்பவர்கள், ரூ.10,000 கூடுதலான விலையிலேயே முன்பதிவு செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓலா. அதாவது, ஓலா S1 ஏரின் விலையை ரூ.10,000 வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.