செப்டம்பரில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350
ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350 மாடாலனது அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாஸிக், மீட்டியார் உட்பட அனைத்து மாடல்களும் புதிய J சீரிஸ் இன்ஜினைப் பெற்றிருக்கும் நிலையில், புதிய அப்டேட் மூலம் தற்போது புல்லட் 350-யிலும் J சீரிஸ் இன்ஜினைக் கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம். மாதம் முழுவதும் காத்திருக்க வைக்காமல், செப்டம்பர் 1-ம் தேதியே புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹண்டர் 350 மற்றும் கிளாஸிக் 350 ஆகிய மாடல்களுக்கு இடையே இந்தப் புதிய புல்லட் 350-யை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: இன்ஜின் மற்றும் பிற அம்சங்கள்
புதிய புல்லட்டின் ஸ்பை ஷாட்கள் இணைத்தில் அவ்வப்போது கசிந்து வந்திருக்கிறது. அந்த ஸ்பை ஷாட்களின் படி, புல்லட்டின் ரெட்ரோ அம்சங்ளான, சிங்கிள் பீஸ் ஸ்டெப் சீட், ரெட்ரோ ஸ்டைல் முகப்பு விளக்கு மற்றும் டெயில் லேம்ப், க்ரோம் டீடெய்லிங் ஆகிய அம்சங்களை அந்நிறுவனம் மாற்றவில்லை. புதிய புல்லட்டில், 20.2hp பவர் மற்றும் 27Nm டார்க்கை உற்பத்தி செய்யும், சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 349 சிசி J சீரிஸ் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. கிளாஸிக் 350-க்கு கீழே பிளேஸ் செய்யப்படுவதால், ட்ரிப்பர் மாடியூல் மற்றும் LED லைட்டிங் ஆகிய வசதிகளை நாம் எதிர்பார்க்க முடியாது. முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.