புதிய அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.3.58 லட்சம்
செய்தி முன்னோட்டம்
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தன் மேம்படுத்தப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் வண்ணங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் அடிப்படையில் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.3.58 லட்சம் முதல் ரூ.3.88 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பைக்கின் இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், வெளிப்புற தோற்றம் மற்றும் பயன்பாட்டு வசதிகளில் சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
புதிய அம்சங்கள்
புதிய அம்சங்கள் மற்றும் வண்ணங்களின் விலை விவரங்கள்
2026 ஆம் ஆண்டிற்கான புதிய கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் கருப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கௌல் மற்றும் புதிய எல்இடி இண்டிகேட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், பயணிகள் பயணத்தின் போது மொபைல் போன்களை எளிதாகச் சார்ஜ் செய்ய உதவும் யுஎஸ்பி டைப்-சி அதிவேக சார்ஜிங் போர்ட் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறு மாற்றங்கள் பைக்கின் கஃபே ரேசர் தோற்றத்தை மேலும் மெருகேற்றுவதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.
விலை
நான்கு கவர்ச்சி நிறங்கள் மற்றும் விலை விவரங்கள்
இந்த பைக் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இதில் பிளாக்-அவுட் என்ஜின் மற்றும் அலாய் வீல்கள் கொண்ட ராக்ஃபோர்ட் ரெட் பதிப்பு ரூ.3.58 லட்சத்திற்கும், ஸ்போக் வீல்கள் கொண்ட பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் பதிப்பு ரூ.3.58 லட்சத்திற்கும் விற்பனைக்கு வந்துள்ளன.
அபெக்ஸ் கிரே வண்ணப் பதிப்பு ரூ.3.81 லட்சத்திலும், மிகவும் பிரீமியம் தோற்றம் கொண்ட மிஸ்டர் கிளீன் பதிப்பு ரூ.3.88 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
என்ஜின்
என்ஜின் திறன் மற்றும் சந்தைப் போட்டி
தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், பைக்கின் என்ஜின் மற்றும் சவாரித் திறனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதில் 648 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு பேரலல்-ட்வின் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 47 எச்பி ஆற்றலையும் 52.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
ஆறு வேக கியர்பாக்ஸ் வசதியுடன் வெளிவந்துள்ள இந்த பைக், நடுத்தர எடைகொண்ட கஃபே ரேசர் பிரிவில் தனது வலுவான இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும்.