ஆகஸ்டில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டில் புதிய 'புல்லட் 350'
இந்தியாவில் ஆகஸ்ட் 30ல் புதிய அப்டேட் செய்யப்பட்ட புல்லட் மாடலை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். புதிய இன்ஜின் மற்றும் சற்று மாறுபட்ட டிசைனுடன் களமிறங்கவிருக்கிறது புதிய புல்லட் 350. இந்த புதிய புல்லட் வெளியீட்டுடன், நீண்ட காலமாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 346சிசி UCE இன்ஜின ஓய்வு பெறுகிறது. முன்னதாக மீட்டியாரில் தொடங்கி தங்களது ஒவ்வொரு மாடலிலும் பழைய இன்ஜினை மாற்றி புதிய இன்ஜினை கொடுத்து வந்த ராயல் என்ஃபீல்டு, இறுதியாக புல்லட்டிலும் அந்த மாற்றத்தை மேற்கொண்டிருக்கிறது. கிளாஸிக் 350-க்கு சற்று கீழே, ஹண்டருக்கு சற்று மேலே பிளேஸ் செய்யப்படவிருக்கும் இந்த புதிய புல்லட்டானது, ஜாவா 42 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக வெளியாகவிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350:
தற்போது விற்பனையில் இருக்கும் புல்லட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 346சிசி UCE இன்ஜினானது, 19hp பவர் மற்றும் 28Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. புதிய புல்லட்டில் பயன்படுத்தப்படவிருக்கும் J-சீரிஸ் இன்ஜினே, தற்போது ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் 350, ஹண்டர் மற்றும் மீட்டியார் 350 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த J-சீரிஸ் இன்ஜினானது, 20.2hp பவர் மற்றும் 27Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த புதிய இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்படவிருக்கிறது. இந்த இன்ஜின் மாற்றத்துடன், டெயில் லைட் முதல் சீட் வரை கிளாஸிக் 350-ஐ ஒத்த டிசைனைப் பெறவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் புதிய புல்லட்டில் வழங்கப்படவிருக்கிறது.