அக்டோபர் மாதம் அதிகரித்த இரு சக்கர வாகன விற்பனை.. முதலிடத்தில் ஹீரோ
இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் இரு சக்கர வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பாண்டு அக்டோபர் மாதம், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 28.21% உயர்ந்திருக்கிறது. அதேபோல், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த நவம்பர் மாதத்தில், இரு சக்கர வாகன விற்பனையானது 12.98% உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 10.25 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த அக்டோபரில் அதிகம் விற்பனையான பைக்குகள் பட்டியலில் வழக்கம் போல முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது ஹீரோவின் ஸ்ப்ளென்டர் மாடல். இந்த மாடலின் விற்பனையானது கடந்த ஆண்டை விட 18.84% அதிகரித்து, 3.11 லட்சமாக இருக்கிறது.
விற்பனையில் டாப் 10 இடங்களைப் பிடித்த பைக்குகள்:
அக்டோபர் மாதம் விற்பனையான இரு சக்கர வாகனங்களில் 30.34% விற்பனைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஸ்ப்ளென்டர். அதனைத் தொடர்ந்து, 1.63 லட்சம் பைக் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஷைன், 1.61 லட்சம் பைக்குகள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தில் பஜாஜ் பல்சர் சீரிஸ் இடம்பெற்றிருக்கிறகது. இவற்றைத் தொடர்ந்து ஹீரோ HF டீலக்ஸ், பஜாஜ் பிளாட்டினா, டிவிஎஸ் ரெய்டர் 125, ஹீரோ பேஷன், டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ், ஹீரோ கிளாமர் மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆகிய பைக்குகள் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவில் விற்பனையான பைக்குகளில் 50%-தத்திற்கும் மேற்பட்ட பைக்குகள் ஹீரோ நிறுவனத்துடையது என்பது குறிப்பிடத்தக்கது.