12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகவிருக்கும் 'மெர்சிடீஸ் SL ரோட்ஸ்டர்'
பிற நாடுகளில் விற்பனையில் இருக்கக்கூடிய ஏழாம் தலைமுறை 'SL ரோட்ஸ்டர்' மாடல் லக்சரி காரை 2021-ம் ஆண்டு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்-பென்ஸ். 12 வருடங்களுக்குப் பிறகு அந்த மாடலை 'SL55 ரோட்ஸ்டராக' அடுத்த மாதம் ஜூன் 22-ம் தேதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். கடைசியாக இந்த மாடலின் ஐந்தாம் தலைமுறை மாடலை 2012-ல் விற்பனை செய்தது மெர்சிடீஸ். இதன் ஆறாம் தலைமுறை மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த இரண்டு டோர்கள் கொண்ட SL கிளாஸ் ஃப்ளாக்ஷிப் ரோட்ஸ்டரை CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.
இந்தியாவில் SL 55 ரோட்ஸ்டர்:
S-கிளாஸ் கேப்ரியோலெட், AMG GT ரோட்ஸ்டர் மற்றும் ஆறாம் தலைமுறை SL ஆகிய மாடல்களுக்கு மாற்றாகவே இந்த காரை களமிறக்கியிருக்கிறது மெர்சிடீஸ். இரண்டாம் தலைமுறை AMG GT-யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டிரைவ்ட்ரெய்ன், சேஸி மற்றும் எலெக்ட்ரிக்கல் கட்டுமானமே இந்த மெர்சிடீஸ் AMG SL 55-யிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 478hp பவர் மற்றும் 700Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய மெர்சிடீஸ் AMG M716-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4.0 லிட்டர், ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜினையே இந்த SL 55-ல் பயன்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ். கூடுதலாக 585hp பவரை வெளிப்படுத்தக்கூடிய மெர்சிடீஸ் AMG SL 63 வேரியன்டும் இருக்கிறது. ஆனால், அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் அந்நிறுவனம் இல்லை.