Page Loader
எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்?
மேட்டர் எனர்ஜியின் ஏரா மாடல் எலெக்ட்ரிக் பைக்

எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்?

எழுதியவர் Prasanna Venkatesh
May 31, 2023
11:28 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 'ஏரா' எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டது மேட்டர் எனர்ஜி நிறுவனம். 5000 மற்றும் 5000+ என இரண்டு வேரியன்ட்களாக வெளிானது மேட்டர் ஏரா. இரண்டு வேரியன்ட்களும் 5kWh பேட்டரி மற்றும் லிக்விட் கூல்டு எலெக்ட்ரிக் மோட்டாருடன், 125கிமீ ரேஞ்சைக் கொண்டு வெளியாகியிருந்தன. 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் 10.5kW பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றன மேட்டர் ஏராவின் எலெக்ட்ரிக் மோட்டார்கள். வெளியீட்டின் போது 5000 வேரியன்டானது ரூ.1.44 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 5000+ வேரியன்டானது ரூ.1.54 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியானது. ஆனால், வெளியாகி சில மாதங்களிலேயே தற்போது இந்த மாடல்களின் விலையை உயர்த்தவிருக்கிறது மேட்டர் எனர்ஜி.

எலெக்ட்ரிக் பைக்

எலெக்ட்ரிக் வாகன விலை உயர்வு: 

எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த FAME-II மானியத்தை குறைத்ததையடுத்து ஜூன் மாதம் முதல் எலெக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் கூடும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஜூன் 6-ம் தேதி முதல் ஏரா மாடல் பைக்குகளின் விலையை ரூ.30,000 உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது மேட்டர் எனர்ஜி. எனினும், அதற்கு முன்பு புக்கிங் செய்பவர்கள் பழைய விலையிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர் FAME-II திட்டத்தின் கீழ் ஏரா மாடல்கள் ரூ.60,000 மானியம் பெற்ற நிலையில், புதிய மாற்றங்களையடுத்து ரூ.22,500 மட்டுமே மானியம் பெறவிருக்கின்றன ஏரா மாடல்கள். இதனையடுத்தே பைக்குகளின் விலையை உயர்த்தியிருக்கிறது மேட்டர் எனர்ஜி. பிற எலெக்ட்ரிக் பைக் நிறுவனங்களும் இனி விலைஉயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது