நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில், அப்டேட் செய்யப்பட்ட புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி.
தற்போது அந்த புதிய ஸ்விப்ட் மாடல் ஒன்றை இந்திய சாலைகளிலும் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். அப்படி சோதனை செய்யப்பட்ட போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது புதிய மாருதி சுஸூகி ஸ்விப்ட்.
தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் இருந்து நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலின் டிசைனில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில மாற்றங்கள் இருக்கின்றன.
புதிய ஸ்விப்டில் புதிய முன்பக்க கிரில், புதிய முகப்புவிளக்குகள் மற்றும் L வடிவ DRLகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மினி கூப்பர் போல சற்று ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு மாறியிருக்கிறது ஸ்விப்ட்.
மாருதி சுஸூகி
புதிய 2024 மாருதி சுஸூகி ஸ்விப்டில் புதிய இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்?
தற்போதைய நான்கு சிலிண்டர்கள் கொண்ட இன்ஜினுக்கு மாற்றாக, மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை புதிய ஸ்விப்டில் மாருதி சுஸூகி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிளும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
தற்போதைய ஸ்விப்ட் வெர்ஷனானது ரூ.5.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சற்று கூடுதலான விலையில் அடுத்த ஆண்டு புதிய ஸ்விப்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.