
பாதுகாப்பு மதிப்பீட்டில் முன்னேற்றம்; 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், அதன் பாதுகாப்பு மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டமான ஏஎன்சிஏபி (ANCAP) நடத்திய மோதல் சோதனையில், புதிய தலைமுறை 2025 மாடல் ஸ்விஃப்ட் கார் 3 நட்சத்திரப் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய தலைமுறை மாடலின் 1 நட்சத்திர மதிப்பீட்டிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும். இந்த ஆண்டு, ஸ்விஃப்ட் கார் இரண்டாவது முறையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டிசம்பர் 2024 இல் ஒரு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற பின்னர், காரில் சில மேம்பாடுகள் செய்யப்பட்டு, மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதன் விளைவாக இந்த 3 நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது.
விபரங்கள்
சோதனை முடிவு விபரங்கள்
காரில் செய்யப்பட்ட பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து, சுஸூகி அல்லது ஏஎன்சிஏபி இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. சோதனையின் விவரங்களின்படி, ஸ்விஃப்ட் பெரியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் 40 க்கு 26.87 புள்ளிகளையும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் 49 க்கு 32.28 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 65% பாதுகாப்பைக் குறிக்கிறது. மேலும், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு சோதனையில், இது 63 க்கு 48 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மாடல்கள்
எந்தெந்த மாடல்களுக்குப் பொருந்தும்?
இந்த மதிப்பீடுகள் அடிப்படை வகைத் தவிர, மற்ற அனைத்து சுஸூகி ஸ்விஃப்ட் மாடல்களுக்கும் பொருந்தும் என்று ஏஎன்சிஏபியின் அதிகாரப்பூர்வ இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட், ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) மற்றும் லேண்ட் சப்போர்ட் சிஸ்டம்ஸ் (LSS) போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய மாடலில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள், இந்திய மாடலில் இல்லை.