பலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பலேனோ மற்றும் வேகன்ஆர் மாடல்களின் 16,041 யூனிட்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட மாடல்களின் எரிபொருள் பம்பில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பம்ப் மோட்டாரின் ஒரு பகுதி பழுதடைதிருக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி அது பழுதடைந்திருந்தால், என்ஜின் திடீரென்று ஸ்தம்பித்து தீ பிடித்து எரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மாருதி சுஸுகி திரும்பப்பெற இருக்கும் வாகனங்கள் ஜூலை மற்றும் நவம்பர் 2019 க்கு இடையில் தயாரிக்கப்பட்டவையாகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் உத்தரவாதம்
பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்கின் 11,851 யூனிட்களும், வேகன்ஆர் மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கின் 4,190 யூனிட்களும் திரும்பபெறப்பட உள்ளன. இந்த மாடல்கள் மாருதி சுஸுகியின் மிகவும் விரும்பப்படும் வாகனங்களாகும். பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெயரை பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில், பலேனோ காரின் விற்பனை 180,018 ஆகவும், வேகன்ஆர் காரின் விற்பனை 183,810 ஆகவும் இருந்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பபெறப்பட்டு பழுதடைந்த பகுதிகள் மாற்றியமைக்கப்படும் என்று மாருதி சுஸுகி உத்தரவாதம் அளித்துள்ளது.