ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி
'மாருதி சுஸூகி 3.0' என்ற தங்களுடைய புதிய திட்டம் குறித்து பகிர்ந்திருக்கிறது, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி. இந்தத் திட்டத்தின் கீழ், 2030-31 நிதியாண்டிற்குள் 15 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும் 2030-31 நிதியாண்டிற்குள், 6 புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுடன், இந்தியாவில் தங்களது போர்ட்ஃபோலியோவின் எண்ணிக்கையை 28 ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. "இந்தியாவில் கார்பன் உமிழ்வைக் குறைக்க, ஒரு தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்திராமல் பல்வேறு தொழில்நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்", எனத் தெரிவித்திருக்கிறார் மாருதி சுஸூகியின் தலைவர் பார்கவா.
இந்தியாவில் மாருதி சுஸூகியின் உற்பத்தி இலக்கு:
தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 22.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது மாருதி. 2031-ம் ஆண்டுக்குள், ஆண்டிற்கு 40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யம் அளவிற்கு, தங்களுடைய உற்பத்தித் திறனை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது மாருதி. அந்த 40 லட்சம் வாகனங்களில், 6 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களும், 10 லட்சம் ஹைபிரிட் வாகனங்களும் அடக்கம். மேலும், இந்த 40 லட்சம் வாகனங்களில், 12 லட்சம் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் உட்பட 32 லட்சம் வாகனங்களை உள்நாட்டிற்காகவும், 7.5 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. இந்த ஏற்றுமதி இலக்கானது, தற்போது ஏற்றுமதி அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.