ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ'
தங்களுடைய புதிய எம்பிவி ஒன்றை ஜூலை 5-ம் தேதி மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய காரின் பெயர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. புதிய எம்பிவி-யை, இன்விக்டோ (Invicto) என்ற பெயரில் மாருதி நிறுவனம் வெளியிடவிருக்கிறதாம். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த எம்பிவியை டொயோட்டா நிறுவனமே உற்பத்தி செய்து மாருதிக்கு சப்ளை செய்யவிருக்கிறது. வெளியீட்டை முன்னிட்டு, இந்த புதிய எம்பிவியின் ஸ்பை படங்கள் தற்போது அதிகமாகவே இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. டொயோட்டா காரில் இருந்த வேறுபடுத்திக் காட்ட புதிய பம்பர்கள், தனித்துவமான அலாய் வீல்கள் மற்றும் புதிய ஹெட்லைட் என டிசைனில் வேறுபாடு காட்டியிருக்கிறதாம் மாருதி சுஸூகி.
மாருதி இன்விக்டோ: என்ன எதிர்பார்க்கலாம்?
மாருதியின் லைன்-அப்பிலேயே மிகவும் விலை உயர்ந்த காராக விற்பனை செய்யப்படும் இன்விக்டோ மாடலானது, மிகவும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜினே இன்விக்டோவிலும் பயன்படுத்தப்படவிருக்கும் நிலையில், ஹைபிரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன் ஒன்றும் கொடுக்கப்படவிருக்கிறது. 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களுடன் வெளியாகவிருக்கும் இந்த இன்விக்டோவானது, மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லாமல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே வெளியாகவிருக்கிறது. மேலும், இதில் கொடுக்கப்படுவிருக்கும் வசதிகளும் இதுவரை வெளியான மாடல்களில் கொடுக்கப்பட்டத்தை விட மிக அதிகமாம். கியா கார்னிவலுக்குப் போட்டியாக, இன்னோவா ஹைகிராஸூடன் சேர்த்து இதனை விற்பனை செய்யவிருக்கிறது மாருதி சுஸூகி நிறுவனம்.