லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் டிசையர் டூர் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). கணிசமான புதிய அப்டேட்டுகளுடன் நிறுவனம், இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் இது விற்பனைக்கு கிடைக்கும். இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 32.12 கிமீ மைலேஜை வழங்கும். இது தற்போது விற்பனையில் இருக்கும் சிஎன்ஜி வெர்ஷனைக் காட்டிலும் 21 சதவீதம் அதிக ரேன்ஜ் திறன் உடையது. பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 23.15 கிமீ ரேன்ஜை தரக்கூடியது.
டிசையர் டூர் எஸ் காரின் தனி சிறப்புகள்
ஆர்க்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதைத்தவிர, ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர்கள் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டூர் லாக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் டிசையர் டூர் எஸ்-இல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன், பிரேக் அசிஸ்ட், ஸ்பீடு லிமிட்டிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இரட்டை ஏர் பேக்குகள் என எக்கசக்க அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய டிசையர் டூர் எஸ் காரின் அதிக மைலேஜிற்கு அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் மோட்டாரே காரணமாக உள்ளது. இரண்டு வெர்ஷன்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.