ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம், ஜூன் 8, 2021 மற்றும் ஜூன் 28, 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட XUV700 ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனங்களின் (எஸ்யூவி) 1,08,306 யூனிட்களை ஆய்வு செய்வதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்தது. மஹிந்திராவால் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியோ மற்றும் தார் போன்ற எஸ்யூவி கார்களில் XUV700 மாடலும் ஒன்றாகும். 2021 ஜூன் 8 முதல் 28 ஜூன் 2023 வரை தயாரிக்கப்பட்ட XUV700இன் 1,08,306 இன்ஜின் பேயில் உள்ள வயரிங் லூமை மஹிந்திரா ஆய்வு செய்ய உள்ளது. மேலும், பிப்ரவரி 16, 2023 முதல் ஜூன் 5, 2023 வரை தயாரிக்கப்பட்ட XUV400 வாகனத்தின் 3,560 யூனிட்கள் பிரேக் பொட்டென்டோமீட்டரின் பயனற்ற ஸ்பிரிங் ரிட்டர்ன் ஆக்ஷனுக்காகவும் ஆய்வு செய்யப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் அறிக்கை
கார்களை திரும்பப் பெற்று மீண்டும் சோதிப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மஹிந்திரா, "நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களையும் தனித்தனியாகத் தொடர்புகொள்ளும். அனைத்து கார் உரிமையாளர்களுக்கும் ஆய்வு மற்றும் அதைத் தொடர்ந்து பிரச்சினைகளை சரிசெய்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதிசெய்யும் முயற்சியில், நிறுவனம் இந்தச் செயல்பாட்டைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாகனம் திரும்பப் பெறுவதில் தன்னார்வக் குறியீட்டிற்கு இணங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு இடையே, வெள்ளிக்கிழமை மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 1.3 சதவீதம் குறைந்து ரூ.1,552 ஆக முடிந்தது.