'Thar' மாடலுடன் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா!
இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா ஒரு லட்சம் தார் (Thar) மாடல் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்தியாவில் 1949-ல் 'வில்லிஸ் CJ3B'-யாக அறிமுகமாகி, 2004-ல் 'MM540'-யாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட 'மேஜர்' மாடல் விட்டுச் சென்ற வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக 2010-ல் இந்தியாவில் அறிமுகப் செய்யப்பட்ட மாடல் தான் மஹிந்திரா தார். புதிய இன்ஜின் மற்றும் புதிய வசதிகளுடன் முதல் தலைமுறை தாரை 2010-ல் அறிமுகம் செய்து மஹிந்திரா. 2.6 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் இன்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் என அப்போதே சிறந்த ஆஃப் ரோடராக அறிமுகமானது தார்.
மஹிந்திரா தார் - கடந்து வந்த பாதை:
2015-ல் பல மாற்றங்களைக் கொடுத்து முதல் தலைமுறை தாரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிட்டது மஹிந்திரா. அதனைத் தொடர்ந்து 2020-ல் இரண்டாம் தலைமுறை தாரை அறிமுகப்படுத்தி இந்திய ஆட்டோமொபைல் துறையையே ஆச்சரியப்படுத்தியது மஹிந்திரா. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, கனெக்டிவிட்டியுடன் கூடிய முரட்டுத்தனமான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மென்ட் பேனல், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என புதிய அவதாரமெடுத்து வந்து நின்றது இரண்டாம் தலைமுறை தார். தற்போது தாரின் AX ரியர் வீல் டிரைவ் அடிப்படை வேரியன்ட் ரூ.10.54 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் எண்டான LX ஹார்டு டாப் AT வேரியன்ட் ரூ.16.78 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.