2024ல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான்கள்
ஆடி A6 ஃபேஸ்லிஃப்ட்: உட்பக்கம் சின்னச் சின்ன மாற்றங்களுடன் இந்த ஆண்டு மே மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆடி A6 ஃபேஸ்லிப்ட். வெளிப்பக்கம் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் DRL டிசைன், புதிய சிங்கள் பிரேம் கிரில் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட முன்பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்களைப் பெற்றிருக்கிறது புதிய A6 ஃபேஸ்லிப்ட். இன்ஜினில் எந்தவித மாற்றங்களும் இன்றி, அதே 2.0 லிட்டர், மைல்டு ஹைபிரிட், டர்போ பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2024ன் இடைப்பகுதியில், ரூ.60 லட்சம் முதல் ரூ.65 லட்சத்திற்குள்ளான விலையில் இந்தியாவில் இந்தப் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்:
புதிதாக வெளியிடப்படவிருக்கும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, வெளியேறும் மாடலை விட பெரிதாகவும், சொகுசாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 7 சீரிஸ் இருப்பது போலான 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் மற்றும் 14.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்ட ட்வின் ஸ்கிரீன் லேயவுட்டைக் கொண்டிருக்கவிருக்கிறது புதிய 5 சீரிஸ் மாடல். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் வெளியாகவிருக்கும் புதிய 5 சீரிஸ் மாடல்களில், 48V மைல்டு ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களையும் நாம் எதிர்பார்க்கலாம். ரூ.70 லட்சம் முதல் ரூ,80 லட்சத்திற்குள்ளான விலையில், 2024ன் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் செடான்.
சிட்ரன் C3X:
இந்தியாவில் தங்களுடைய ஐந்தாவது மாடலாக புதிய C3X மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது சிட்ரன். எஸ்யூவி மாடலில் இருப்பதைப் போல கூடுதலான கிரௌண்டு கிளியரன்ஸை இந்த செடான் மாடலுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்தியாவில் சிட்ரன் விற்பனை செய்து வரும் C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ் உள்ளிட்ட மாடல்கள் கொண்டிருக்கும் அதே CMP பிளாட்ஃபார்மிலேயே புதிய C3X மாடலையும் கட்டமைக்கவிருக்கிறது சிட்ரன். எனவே, மேற்கூறிய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட பாகங்களே இந்தப் புதிய காரிலும் பயன்படுத்தப்படலாம். 110hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறவிருக்கும் இந்த மாடலானது, 2024ன் தொடக்கத்திலேயே, ரூ.10 முதல் 12 லட்சம் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோண்டா அமேஸ்:
இந்தியாவில் தங்களுடைய மூன்றாம் தலைமுறை அமேஸ் செடானை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது ஹோண்டா. முந்தைய வெர்ஷனை விட அதிக அப்டேட்களைக் கொண்டு இந்தப் புதிய வெர்ஷனை ஹோண்டா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் பெரிய மாற்றமின்றி, தற்போதைய மாடலில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்படவிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் சிட்டி மற்றும் உலகளாவிய பிற ஹோண்டா செடான்களின் டிசனை மையப்படுத்திய டிசனையே புதிய அமேஸ் பெறவிருக்கிறது. 2024ன் இடைப்பகுதியில் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள்ளான விலையில் புதிய அமேஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாருதி சுஸூகி டிசையர்:
இந்தியாவில் தங்களுடைய புதிய ஸ்விப்ட் மாடலின் அறிமுகத்தைத் தொடர்ந்து, புதிய டிசையர் மாடலையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மாருதி சுஸூகி. புதிய பிளாட்ஃபார்மைக் கொண்டு, புதிய டிசைனுடன், பல முக்கிய மற்றும் கவனிக்கத்தக்க மாற்றங்களுடைய புதிய பரிமாணமெடுக்கவிருக்கிறது மாருதி சுஸூகி டிசையர். இன்ஜினும் ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும, மூன்று சிலிண்டர்கள் கொண்ட, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் புதிய டிசையரிலும். 2024ன் இடைப்பகுதியில், ரூ.7 லட்சம் முதல் ரூ.9.5 லட்சத்திற்குள்ளான விலையில் புதிய டிசையர் மாடலை மாருதி சுஸூகி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மெர்சிடீஸ் பென்ஸ் E-கிளாஸ்:
புதிய தலைமுறை E-கிளாஸ் சொகுசு செடானை அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது மெர்சிடீஸ் பென்ஸ். ஆனால், முந்தைய வெர்ஷனைப் போலவே நீளமான வீல்பேஸ் கொண்ட E-கிளாஸ் மாடலை மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மெர்சிடீஸ் பென்ஸின், C-கிளாஸ் மற்றும் S-கிளாஸ் செடான்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில வசதிகளை இந்த முறை E-கிளாஸிலும் கொடுக்கவிருக்கிறது மெர்சிடீஸ். இந்தியாவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன், 2024ன் இறுதியில், ரூ.70 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரைத்திற்குள்ளான விலையில் புதிய மெர்சிடீஸ் பென்ஸ் E-கிளாஸ் சொகுசு செடான் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போர்ஷே பனமேரா:
நான்கு டோர்கள் கொண்ட ஸ்போர்ட் செடானான போர்ஷே பனமேரா அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட மாடுலார் ஸ்போர்ட் டூல்கிட் (MSB) பிளாட்ஃபார்மின் மீது கட்டமைக்கப்படவிருக்கிறது புதிய பனமேராவை. இந்த MSB பிளாட்ஃபார்மை போர்ஷே மற்றும் பென்ட்லி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரூ.1.6 கோடி முதல் ரூ.2.8 கோடிக்குள்ளான விலையில், 2.9 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 4.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் புதிய போர்ஷே பனமேரா வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா சூப்பர்:
இந்தியாவில் BS 6.2 விதிமுறை அமலுக்குப் பின் விற்பனையை நிறுத்தப்பட்ட சூப்பர் (Superb) செடானின், புதிய தலைமுறை வெர்ஷனை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது ஸ்கோடா. 190hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, அப்டேட் செய்யப்பட்ட 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்ட சூப்பர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். மேலும், CBU (Completely Built Unit) முறையில், குறைவான எண்ணிக்கையிலேயே அந்த மாடலை விற்பனை செய்யவிருக்கிறது ஸ்கோடா. 2024ன் இறுதியில், ரூ.50 லட்சம் விலையில் புதிய சூப்பர் மாடலை ஸ்கோடா இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.