அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 200 ட்யூக், என்ன மாற்றம்?
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட 200 ட்யூக் பைக்கை இந்தியாவில் விரைவில் வெளியிடவிருக்கிறது கேடிஎம். இந்தப் புதிய பைக்கானது தற்போது டீலர்ஷிப்களுக்கு வரத் துவங்கியிருக்கிறது. மாற்றம் என்று பார்த்தால் புதிய மாடலில் பெரிய மாற்றம் எதையும் கேடிஎம் செய்யவில்லை. 390 ட்யூக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்இடி முகப்புவிளக்குளை புதிய 200 ட்யூக்கில் பயன்படுத்தியிருக்கிறது, அவ்வளவுதான். இதைத் தவிர மாற்றங்கள் என்று எதுவும் இல்லை. தற்போது ரூ.1.93 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 200 ட்யூக். புதிய ட்யூக்கானது இதனை விட ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை கூடுதலான விலையில் வெளியிடலப்படலாம் எனத் தெரிகிறது. எல்இடி முகப்புவிளக்கு வேண்டாம் என்பவர்களுக்காக இப்போது விற்பனையில் இருக்கும் மாடலையும் தொடர்ந்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது கேடிஎம்.
2023 கேடிஎம் 200 ட்யூக்: இன்ஜின் மற்றும் வசதிகள்
200 ட்யூக் மாடலில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்ட, 25.4hp பவர் மற்றும் 19.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு வால்வுகள் கொண்ட, லிக்விட்-கூல்டு 199.5சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இன்ஜினானது இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட BS6-ன் இரண்டாம் கட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குப் ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ட்யூக்கில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குடன், பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் இன்வெர்டட் ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ப்ரீலோடு அட்ஜஸ்டட் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடலை கேடிஎம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போதே இதன் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.