200 ட்யூக் மற்றும் 250 அட்வென்சர் குறித்த கேடிஎம்-ன் அறிவிப்புகள் என்னென்ன?
தங்களது லைன்-அப்பில் இரண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கேடிஎம். 390 அட்வென்சர் மாடலைப் போலவே 250 அட்வென்சர் மாடலும், குறைவான சீட் உயரம் கொண்ட 'V' வேரியன்ட் ஒன்றைப் பெறவிருக்கிறது. ஸ்டாண்டர்டான கேடிஎம் 250 அட்வென்சரானது 855மிமீ சீட் உயரத்தைக் கொண்டிருக்கும். புதிய 250 அட்வென்சர் V-யானது 834மிமீ சீட் உயரத்துடன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இந்த மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாமல் ஸ்டாண்டர்டான கேடிஎம் 250 அட்வென்சரில் உள்ள வசதிகள் மற்றும் இன்ஜினையே புதிய V வேரியன்டிலும் கொடுத்திருக்கிறது கேடிஎம். மேலும், விலையிலும் எந்த மாற்றமும் இன்றி, ஸ்டாண்டர்டான கேடிஎம்மின் விலையான ரூ.2.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனை செய்யப்படவிருக்கிறது 'கேடிஎம் 250 அட்வென்சர் V' வேரியன்ட்.
எல்இடி முகப்பு விளக்குகளைப் பெறும் 200 ட்யூக்:
எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய 200 ட்யூக் வெர்ஷன் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது கேடிஎம். எல்இடி முகப்பு விளக்குகளை முன்னர் 250 மற்றும் 390 ட்யூக்குகளில் மட்டுமே கேடிஎம் கொடுத்து வந்தது. இந்த புதிய எல்இடி வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஹாலஜன் முகப்பு விளக்குகளைக் கொண்ட வெர்ஷனும் விற்பனையில் இருக்கும் என அறிவித்திருக்கிறது கேடிஎம். ஹாலஜன் விளக்குகளுடன் கூடிய வெர்ஷன் ரூ.1.93 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எல்இடி விளக்குகளுடன் கூடிய வெர்ஷன் முந்தைய வெர்ஷனை விட ரூ.4,000 கூடுதலாக ரூ.1.97 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரை TFT டிஸ்பிளேவை 200 ட்யூக்கில் கேடிஎம் அளிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அதே LCD டிஸ்பிளே மட்டும் தான்.