'லூனா'வை எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் கைனடிக் நிறுவனம்!
இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் சாதனை படைத்த லூனா மாடலை மீண்டும் சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது கைனடிக் குழுமம். ஆனால், இம்முறை பெட்ரோல் மாடலாக இல்லாமல் எலெக்ட்ரிக் மாடலாகா, e-லூனாவாக கைனடிக் கிரீன் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படவிருக்கிறது இந்த புதிய பைக். கைனடிக் குழுமத்தின் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவே கைனடிக் கிரீன். இந்தியாவில் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். சில்லறை வணிகச் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யாமல், வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது கைனடிக் கிரீன். 1990-களில் இந்தியாவில் விற்பனையில் இருந்த லூனா மாடலை தற்போது எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் சந்தைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
கைனடிக் கிரீன் நிறுவனத்தின் திட்டம் என்ன?
இந்த புதிய வாகனம் உருவாக்கப்பட்டு வருவதை கைனடிக் கிரீன் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான சுலஜா ஃபிரோடியா மோத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், இந்த புதிய வாகனத்தின் டிசைனும் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு கசிந்தது. கிட்டத்தட்ட பழைய லூனாவின் டிசைனை அப்படியே புதிய லூனாவிலும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது கைனடிக் கிரீன். இந்த புதிய லூனாவையும், சொந்தப் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்காமல், வணிக பயன்பாட்டை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறது கைனடிக் கிரீன். இந்த புதிய வாகனம் குறித்த மேலதிக தகவல்களை இனி வரும் நாட்களில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.