கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்?
தங்களுடைய சோனெட் (Sonet) எஸ்யூவிக்கு புதிய லுக்கை கொடுக்க முடிவு செய்திருக்கிறது கியா. அதனைத் தொடர்ந்து தற்போது சோனெட்டில் சில மாற்றங்களை அந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த டிசைனில் மாற்றம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்த வருட இறுதிக்குள் சர்வதேச சந்தையில் வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம். அதே சமயத்தில் இந்தியாவிலும் அந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிடலாம் எனத் தெரிகிறது. இந்தியாவில் ரூ.7.79 லட்சம் முதல் ரூ.14.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா மற்றும் XUV300 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது கியா. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக சில வசதிகளை அந்நிறுவனம் அளிக்கலாம்.
இன்ஜினில் மாற்றம்?
பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தன. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கார்களின் இன்ஜினை அப்டேட் செய்தன. கியாவும் தங்களுடைய சோனெட்டின் இன்ஜினை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. எனவே, இந்த ஃபேஸ்லிஃப்டில் இன்ஜின் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடனே புதிய ஃபேஸ்லிஃப்ட் வெளியாகலாம். வரும் மாதங்களில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தவிருக்கிறது இந்திய அரசு. எனவே, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும், புதிய வசதிகளையும் இந்த ஃபேஸ்லிஃப்டுடன் கியா சேர்த்து அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.