Loading...
பெட்ரோலில் அளவுக்கு அதிகமான எத்தனால் கலப்பு: கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் தீவிர ஆய்வு
பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பு விவகாரத்தில் கேரள பெட்ரோல் பங்குகளில் திடீர் சோதனை.

பெட்ரோலில் அளவுக்கு அதிகமான எத்தனால் கலப்பு: கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் தீவிர ஆய்வு

எழுதியவர் Vasuki
Nov 09, 2026
06:49 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் மத்திய அரசு நிர்ணயித்த 20 சதவீத அளவை விட மிக அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டு இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவிலும் பெட்ரோல் பங்குகளில் திடீர் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த மாதிரி சேகரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கேரள உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் தெரிவித்துள்ளார். சேகரிக்கப்படும் மாதிரிகள் தேசிய அங்கீகாரம் பெற்ற என்ஏபிஎல் (NABL) ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

கலப்பை கண்டறிதல்

கர்நாடகாவில் 31% வரை எத்தனால் கலப்பு 

கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மேற்கொண்ட சோதனைகளில், சில விற்பனை நிலையங்களில் சாதாரண பெட்ரோலில் 26% முதல் 31.2% வரை எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது மத்திய அரசின் E20 எனப்படும் 20 சதவீத கலப்பு வரம்பை மீறிய செயல் என்பதால் நுகர்வோர் மத்தியில் வாகனங்களின் என்ஜின் தரம் மற்றும் மைலேஜ் தொடர்பாகக் கவலை எழுந்தது.

இதையடுத்து கேரளாவின் எர்ணாகுளம் செம்புமுக்கு பகுதியில் உள்ள ஐஓசி பங்க்கில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஒரு லிட்டர் அளவிலான மாதிரிகளைப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மத்திய அமைச்சரின் கருத்து

எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த ஆய்வறிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ளன.

நாடு முழுவதும் சோதிக்கப்பட்ட 893 மாதிரிகளிலும் எத்தனால் அளவு 19% முதல் 21% வரையிலான முறையான அளவிலேயே இருந்ததாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, மாநில அரசுகள் சுதந்திரமாக ஆய்வுகளை மேற்கொள்ள முழு உரிமை உண்டு என்றும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் விவசாயிகளுக்கு உதவவுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் இப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT