பேட்டரி தயாரிப்பிற்காக இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்த JLR
எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிக்களைத் தயாரிக்க இந்திய நிறுவனமான அக்ராடாஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கவிருக்கிறது JLR (ஜாகுவார் லேண்டு ரோவர்). JLR மற்றும் அக்ராடாஸ் இரண்டு நிறுவனங்களுமே இந்தியாவைச் சேர்ந்த டாடா குழுமத்திடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அக்ராடாஸ் நிறுவனமானது ஸ்பெயின் அல்லது பிரிட்டனில் புதிய பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனமே 13,000 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தில் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை கட்டமைப்பதற்காக குஜராத் அரசுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. JLR நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கும், தொடக்கத்தில் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் மூலமாகவே பேட்டரிக்கள் தயாரித்து விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.
JLR எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிக்கள்:
தற்போது ஜாகுவார் ஐ-பேஸ் என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே தங்கள் லைன்அப்பில் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் காரானது 387 லிட்டர் செல்லின் மூலம் 84kWh எனர்ஜியைப் பெறுகிறது. ஆனால், அக்ராடாஸ் நிறுவனத்திடமிருந்து 342 லிட்டர் செல்லின் மூலம் 120kWh எனர்ஜியை பெறும் வகையிலான பேட்டரியை பெறத் திட்டமிட்டிருக்கிறது JLR. இந்த புதிய பேட்டரியானது 720 கிமீ ரேஞ்சு வரை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு பொறியாளர் தாமஸ் முல்லர். புதிதாக தயாரிக்கப்படும் பேட்டரியின் டிசனை முதல் தயாரிப்பு வரை அனைத்தையும் அக்ராடாஸ் நிறுவனமே பார்த்துக் கொள்ளவிருக்கும் நிலையில், JLR நிறுவனம் மேற்பார்வை மட்டும் செய்யவிருக்கிறது.