எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்காக 15 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.1,23,200 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம். இந்நிறுவனத்தை 2008-ல் இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக மாறப்போவதாக 2021-ன் தொடக்கத்தில் அறிவித்தது அந்நிறுவனம். ஆனால், எப்போது பெட்ரோல் டீசல் வாகனங்களின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தும் என்பது குறித்து அறிவிப்புகள் எதையும் தற்போது அந்நிறுவனம் வெளியிடவில்லை. வருடத்திற்கு 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.20,500 கோடி) எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு செலவிடப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜாகுவாரின் திட்டம் என்ன?
2018-ல் ஐ-பேஸ் என்ற எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டது அந்நிறுவனம். ஆனால், அதன் பிறகு இப்போது வரை வேறு எலெக்ட்ரிக் மாடல்களை எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. போட்டியாளர்களுடன் போட்டி போடவே எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது தனி கவனத்தை செலுத்த தற்போது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர். மேலும், 2025-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் ரேஞ்சு ரோவர் ஒன்றையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இதற்கான புக்கிங்குகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.