தலைக்கவசம் மட்டுமல்ல ரைடிங் கியர்களைப் பயன்படுத்துவதையும் பரிசீலனை செய்யுங்கள் பைக்கர்களே
இன்றைய வேகமான நவீன வாழ்க்கை முறையில் ஒரு வீட்டிற்கு ஒரு பைக் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கு அடுத்த படிநிலையாக இளைஞர்கள் பலரும் வேகமாக செல்லக்கூடிய ப்ரீமியம் பைக்குகளை விரும்பத் தொடங்கவிட்டார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் ப்ரீமியம் பைக் பயன்பாட்டைத் தொடர்ந்த ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் என உலகின் பல்வேறு முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பாளர்கள் இந்திய பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து தங்களுடைய ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். வேகமான பைக்கை வாங்கும் போது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை இயக்கும் நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமல்லவா? கண்டிப்பாக, அதிவேக பைக்குகளை இயக்குபவர்கள் ரைடிங் கியர்களைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். அது என்னென்னவென்று பார்க்கலாம்.
பைக்கை இயக்குவதற்கு ரைடிங் கியர்கள்:
அதிகபட்சம் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரப் பயணம் மட்டுமே தினசரி மேற்கொள்பவர்கள் பைக் ரைடிங் கியர்களைப் பயன்படுத்தவில்லை என்றால் கூட சரி தான். ஆனால், தினசரி அதிக நேரம் பைக்கிலேயே பிரயாணம் செய்பவர்கள் கண்டிப்பாக ரைடிங் கியர்களை வாங்குவதைப் பற்றிப் பரிசீலனை செய்யலாம். பைக்குக்கான ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யும் நாம், நம்முடைய பாதுகாப்பிற்காக சில ஆயிரங்களை செலவு செய்யத் தயங்கக்கூடாது. நம் உடலில் ஒவ்வொரு பாகத்தையும் பாதுகாப்பதற்காக பல்வேறு ரைடிங் பொருட்கள் விற்பனையில் இருக்கின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக ரைடிங் கியர்கள் எனக் குறிப்பிடுவார்கள்.
என்னென்ன ரைடிங் கியர்கள் இருக்கின்றன?
நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு ரைடிங் கியர் என்றால் அது ஹெல்மெட் தான். அதனைத் தவிர்த்து, ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேண்ட், ரைடிங் கிளவுஸ் மற்றும் ரைடிங் ஷூ எனப் பல்வேறு விதமான ரைடிங் கியர்கள் இருக்கின்றன. சாதாரணமான பொருட்களுக்கும் ரைடிங் கியர்களுக்கு என்ன வித்தியாசம்? நாம் பைக்கில் பயணம் செய்யும் போது தவறி விழ நேர்ந்தால் நம் உடலில் எந்த பாகங்கள் அதிக சேதாரத்தை சந்திக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கணக்கில் கொண்டு, அதனைப் பாதுகாக்கும் வகையில் ரைடிங் கியர்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ரைடிங் கையுறைகளானது நம்முடைய விரல் முட்டிகளைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த இடத்தில் மட்டும் கடினமான பொருளைக் கொண்டிருக்கும்.
எவ்வளவு செலவாகும்?
குறைவான விலையில் தொடங்கி லக்சரியான ரைடிங் கியர்கள் வரை அனைத்து தரப்பு விலைகளிலும் ரைடிங் கியர்கள் கிடைக்கின்றன. 25,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவு செய்தால் நமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான ரைடிங் கியர்களை வாங்க முடியும். சிலர் விலை குறைவான ரைடிங் கியர்களை வாங்குவார்கள். ஆனால், அவை நம்முடைய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்காது. ரைடிங் கியர்களின் முக்கிய பணியே நம்முடைய பாதுகாப்பு தான். அதனைத் தவிர்த்து விட்டு குறைவான விலையிலான கியர்களை வாங்குவது அர்த்தமற்றது. சிலர் காவல்துறையினரிடம் சிக்கக்கூடாது என்பதற்காவே குறைந்த விலையிலான ஹெல்மெட்டை அணிந்திருப்பார்கள். ரைடிங் கியர்கள் வாங்குவது நம்முடைய பாதுகாப்பிற்கு என்பதை உணர்ந்து வாங்குவது சிறந்தது.
ரைடிங் கியர்கள்: மாதிரி விலைப்பட்டியல்
ஒவ்வொரு ரைடிங் கியரையும் வாங்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்ற மாதிரி விலைப்பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். ஹெல்மெட் - ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரைடிங் ஜாக்கெட் - ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கையுறைகள் - ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை ரைடிங் பேண்ட் - ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை ரைடிங் ஷூக்கள் - ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை தனியாக இவற்றை வாங்குவது என்பது மிகவும் கடினம். ஏனெனில், தனியாக இதனை வாங்குவதற்கென பட்ஜெட்டில் நாம் ஒதுக்க மாட்டோம். எனவே, ஒரு பைக்கை வாங்கும் போதே ரைடிங் கியர்களுக்கான தொகையையும் சேர்த்துக் கணக்கிடுவது சிறந்தது.