புதிய க்ரெட்டா N லைன் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்.. எப்போது?
வெர்னாவைப் போல டிசனைுடன் க்ரெட்டாவின் ஃபேஸ்லிப்ட் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அதோடு சேர்த்து க்ரெட்டா N லைன் மாடலையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வென்யூ N லைன், i20 N லைனுக்கு அடுத்தபடியாக N லைன் வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிடும் மூன்றாவது மாடலாக இந்த க்ரெட்டா N லைன் இருக்கும். க்ரெட்டாவின் ஸ்டான்டர்டு மாடலைப் போலவே, ஆனால் N லைன் டிசனை லாங்குவேஜை அடிப்படையாகக் கொண்டு க்ரெட்டா N லைனை ஹூண்டாய் உருவாக்கலாம் எனத் தெரிகிறது. வரும் ஜூன் மாதம் இந்தியாவில் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவியை அறிமுகம் செய்து ஆகஸ்ட் மாதம் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ஹூண்டாய்.
இன்ஜின் மற்றும் வெளியீடு:
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கொடுக்கவிருக்கிறது ஹூண்டாய். அதோடு கூடுதலாக வெர்னா மற்றும் அல்கஸாரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 160hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் கூடுதலாகக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய க்ரெட்டா N லைனில் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸூடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை மட்டும் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் க்ரெட்டா N லைன் ஆகிய இரு மாடல்களுக்குமே ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கி மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.