
விற்பனையில் சாதனை; மார்ச் 2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்தது ஹூண்டாய் க்ரெட்டா
செய்தி முன்னோட்டம்
ஹூண்டாய் க்ரெட்டா மார்ச் 2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 18,059 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்தம் 1,94,871 யூனிட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், க்ரெட்டா இப்போது இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்தமாக மூன்றாவது அதிக விற்பனையான காராக உள்ளது.
மேலும், இது மாருதி சுஸூகியின் ஃபிராங்க்ஸ் போன்ற போட்டியாளர்களை விஞ்சியுள்ளது.
இந்தியாவின் சிறந்த விற்பனையான எஸ்யூவி என்ற இடத்தை இந்த எஸ்யூவி 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) தக்க வைத்துக் கொண்டது.
இந்த காலாண்டில் 52,898 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 2015இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, க்ரெட்டா அதன் அதிகபட்ச வருடாந்திர விற்பனையை அடைந்து, 20% ஆண்டு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
அம்சங்கள்
ஹூண்டாய் க்ரெட்டாவின் முக்கிய அம்சங்கள்
ஹூண்டாய் க்ரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று எஞ்சின் தேர்வுகளுடன் பத்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
விலைகள் ரூ.11.10 லட்சம் முதல் ரூ.20.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா எலக்ட்ரிக் வேரியண்டில் 42 கிலோவாட் மற்றும் 51.4 கிலோவாட் என இரண்டு பேட்டரி தேர்வுகளும் உள்ளன.
இதன் விலைகள் ரூ.17.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றன.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்குநருமான தருண் கார்க், க்ரெட்டாவின் வெற்றி இந்திய வாடிக்கையாளர்களுடன் அது கட்டியெழுப்பியுள்ள வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது என்றார்.