அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வரும் ஹூண்டாய்
இந்தியாவில் விற்பனையாகி வரும் மூன்று வரிசை சீட்கள் கொண்ட அல்கஸார் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஒன்றை ஹூண்டாய் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கிரில்கள், புதிய அலாய் வீல்கள், முன்பக்க மற்றும் பின்பக்க விளக்குகளை புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்டில் ஹூண்டாய் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அல்கஸாரின் உட்பக்கத்திலும் பல்வேறு டிசைன் மேம்பாடுகளுடன் புதிய வசதிகள் பலவும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ADAS பாதுகாப்பு அம்சங்களையும் புதிய அல்கஸாரில் ஹூண்டாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும், காஸ்மெடிக் மேம்பாடுகள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வசதிகளையும் புதிய அல்கஸாரில் நாம் எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் அல்கஸார்: இன்ஜின் மாற்றம் உண்டா?
அல்கஸாரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் ஹூண்டாய் நிறுவனம் இன்ஜின் மாற்றம் அல்லது மேம்பாடு செய்ய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதன்படி, 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கூடிய அதே, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடனேயே அல்கஸார் வெளியாகும். புதிய ADAS வசதிகள், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் ஃபேஸ்லிஃப்டில் கொடுக்கப்படலாம். இந்த அல்கஸார் ஃபேஸ்லிஃப்டை 2024ம் ஆண்டு பிற்பாதியில் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.