நெக்ஸான், பிரெஸ்ஸாவுக்குப் போட்டி! ஹோண்டா 0 ஆல்ஃபா EV மற்றும் புதிய சப்-4m எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் எஸ்யூவி மாடல்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எஸ்யூவிகளை களம் இறக்க ஆயத்தமாகி வருகிறது. இதில் ஹோண்டா 0 ஆல்ஃபா என்ற பெயரில் பிரத்யேக எலக்ட்ரிக் எஸ்யூவியும், இந்திய சாமானிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் முற்றிலும் புதிய சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
வடிவமைப்புச் சிறப்புகள்
ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்ம் மற்றும் வடிவமைப்புச் சிறப்புகள்
ஹோண்டா 0 ஆல்ஃபா இ-எஸ்யூவி, மெலிதான, இலகுவான மற்றும் அறிவுப்பூர்வமான வடிவமைப்புத் தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.
வழக்கமான பெட்ரோல் கார்களை எலக்ட்ரிக் காராக மாற்றாமல், முற்றிலும் புதிய ஸ்கேட்போர்டு இ-பிளாட்ஃபார்மில் இது கட்டப்படுகிறது.
இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஒளிரும் ஹோண்டா லோகோ, U வடிவ பின்புற விளக்குகள் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்களுடன் ஃபியூச்சரிஸ்டிக் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகள்
450-500 கிமீ ரேஞ்ச் மற்றும் நவீன வசதிகள்
காரின் உட்புறத்தில் லெவல் 2+ ADAS பாதுகாப்பு வசதி, அகலமான டிஜிட்டல் திரைகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பங்கள் மற்றும் பேனோராமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெறவுள்ளன.
ஒற்றை சார்ஜில் 450 முதல் 500 கிமீ வரை பயணிக்கக்கூடிய வகையில் இதன் பேட்டரி அமைக்கப்படவுள்ளது.
மேலும், அதிவேக சார்ஜர் மூலம் வெறும் 15 நிமிடங்களில் 15 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
ராஜஸ்தானில் உள்ள தபுகாரா ஆலையில் இது உற்பத்தி செய்யப்படவுள்ளது.
டாடாவிற்குப் போட்டி
டாடா நெக்ஸானுக்குப் போட்டியாகப் புதிய சப்-4m எஸ்யூவி
ஹோண்டாவின் மற்றொரு தயாரிப்பான சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவி, டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கூட்டுறவோடு பிரத்யேகமாக இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.
டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுக்கு சவாலாக வரவுள்ள இந்த காரில், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் விருப்பங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.