
முந்தைய மாடலை விட அதிக பவரை உற்பத்தி செய்யும் RE ஹிமாலயன் 452
செய்தி முன்னோட்டம்
அடுத்த மாதம் புதிய ஹிமாலயன் பைக்கை வெளியிடவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அந்த பைக்கிற்கான ப்ரமோஷனல் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.
ப்ரமோஷனல் வீடியோவில் இருந்த சில தகவல்களைக் கொண்டு புதிய ஹிமாலயன் 452 பைக்கில் என்னென்ன வசதிகள் இருக்கிறதென ஆராய்ந்திருக்கிறார்கள்.
அதன்படி, புதிய ஹிமாலயன் 452 மாடலானது முந்தைய மாடலை விட 3 கிலோ குறைவாக, 196 கிலோ எடையைக் கொண்டிருக்கவிருக்கிறது. 'காமட் ஒயிட்' நிற புதிய ஹிமாலயனை ப்ரமோஷனல் வீடியோவில் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
இதில் காமட் என்பது உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி மலைக்கு அருகில், கார்வா பகுதியில் இருக்கும் மலைகளில் இரண்டாவது மலையின் பெயராகும். குறிப்பிட்டு இந்தப் பெயரை பைக்கின் நிறம் ஒன்றுக்கு பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ராயல் என்ஃபீல்டு
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452:
புதிய ஹிமாலயனில் பெரிய இன்ஜினை ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தியிருக்கிறது என்ற தகவல் முன்பே வெளியாகிவிட்டது. எனினும், எவ்வளவு பவரை புதிய இன்ஜின் உற்பத்தி செய்யும் என்ற தகவல் ரகசியமாகவே இருந்து வந்தது.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, புதிய ஹிமாலயன் 452-வானது 40hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
இது முந்தைய ஹிமாலயன் 411 பைக்கின் இன்ஜின் உற்பத்தி செய்த பவரை விட 16hp அதிகமாகும். புதிய ஹிமாலயனில் 452சிசி லிக்விட் கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
முந்தைய 411 மாடலில் கொடுக்கப்பட்டிருந்து நான்கு பாடுகளைக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலுக்குப் பதிலாக, ஒரேயொரு பாடு கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை புதிய 452 மாடலில் வழங்கியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.