இந்தியாவில் 200சிசி பிரிவில் புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹார்லி டேவிட்சன்
இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தங்களது விலை குறைந்த 'X440' பைக்கை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ரூ.2.29 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது ஹா்ரலி டேவிட்சனின் X440 பைக் மாடல். தற்போது, அதனைத் தொடர்ந்து மற்றுமொரு புதிய சிறிய இன்ஜின் கொண்ட பைக்கை வெளியிட ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஹார்லி டேவிட்சன் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் புதிய பைக் மாடலை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் 200-300 சிசிக்கு இடைப்பட்ட இன்ஜினைக் கொண்ட பைக்குகளுக்கு இளைஞர்களுக்கிடையே நல்ல வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து, 210 சிசி இன்ஜினைக் கொண்ட பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹார்லி.
ஹீரோவின் இன்ஜினுடன் புதிய பைக்:
கடந்த ஆகஸ்ட் இறுதியில், இந்தியாவில் தங்களது புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டது ஹீரோ. 210சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டரைக் கொண்ட இன்ஜினுடன் வெளியாகியிருந்தது கரிஸ்மா XMR. முன்னதாக, ஹீரோ நிறுவனத்துடன் கைகோர்த்தே தங்களுடைய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருந்தது ஹார்லி-டேவிட்சன். அந்த பைக்கின் இன்ஜினை ஹீரோ பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோவின் கரிஸ்மா இன்ஜினைப் பயன்படுத்த புதிய பைக்கை வெளியிடவிருக்கிறது ஹார்லி டேவிட்சன். ஆம், ஹீரோ கரிஸ்மாவில் பயன்படுத்திய 210சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தி X210 பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். 25hp பவர், 20.4Nm டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன், ரூ.1.7 லட்சம் விலையில் இந்தியாவில் புதிய ஹார்லி 200சிசி பைக் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.