என்னென்ன வசதிகளுடன் உருவாகி வருகிறது டாடாவின் புதிய கர்வ் எலெக்ட்ரிக் கார்?
இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களுடைய புதிய கர்வ் கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த கான்செப்ட் மாடலை 2024ம் ஆண்டு இந்தியாவில் வெளியிட டாடா திட்டமிட்டிருக்கும் நிலையில், இதன் தயாரிப்பு வடிவத்தை அடையவிருக்கும் வடிவத்தை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். மெல்லிய எல்இடி பின்பக்க விளக்குகள் மற்றும் ஸ்லீக்கான ரூஃப்லைனுடன், மிகவும் ஸ்டைலான கூப் எஸ்யூவியாகக் காட்சியளிக்கிறது டாடா கர்வ் EV. தொடக்கத்தில் இதன் எலெக்ட்ரிக் வடிவத்தை மட்டுமே வெளியிட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வந்தாலும், இதன் எரிபொருள் வடிவம் ஒன்றையும் வெளியிடும் முடிவில் அந்நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடா கர்வ் EV: வசதிகள்
டாடா கர்வ் EV-யில் உட்பக்கம் குறித்த தகவல்கள் பெரிதாக வெளியாகவில்லை. எனினும், கான்செப்ட் மாடலில் இருந்தது போலான டிசனை மற்றும் வசதிகளையே கர்வ் EV-யின் தயாரிப்பு வடிவமும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளையே கர்வ் EV கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்டமோட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், ஆறு ஏர்பேக்குகள், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமார, ADAS பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் டாடா கர்வ் கொண்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
டாடா கர்வ் EV: எலெக்ட்ரிக் மோட்டார்
புதிய கர்வ் EV-யை தங்களுடைய இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்மின் மீது டாடா கட்டமைத்து வருகிறது. இந்த பிளாட்ஃபார்மானது எலெக்ட்ரி மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரண்டையும் கட்டமைக்கப் பயன்படும் பிளாட்ஃபார்மாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரே சார்ஜில் 500 கிமீ வரை செல்லக்கூடிய வகையில் ரேஞ்சைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி செட்டப்பை புதிய கர்வ் EV-யில் டாடா பயன்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்வ் மாடலின் எரிபொருள் வெர்ஷனில், முற்றிலும் புதிய 1.2 லிட்டர் T-GDi டர்போ பெட்ரோல் இன்ஜினை டாடா பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினானது 123hp பவர் மற்றும் 225Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.