Page Loader
FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்!
எலெக்ட்ரிக் தயாரிப்பு நிறுவனங்கள் மீது புதிய குற்றச்சாட்டு

FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 30, 2023
12:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10,000 கோடி மதிப்பிலான FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை, தயாரிப்பு நிறுவனங்கள் சலுகை விலையில் வழங்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், தங்களுடைய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் முக்கியமான பாகங்களான எலெக்ட்ரிக் மோட்டார்கள், கண்ட்ரோலர்கள் மற்றும் சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து குறிப்பிட்ட நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் உள்நாட்டு தயாரிப்பு விபரங்களை அந்நிறுவனங்கள் தவறாகக் கொடுத்திருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீது விசாரணை: 

இதனைத் தொடர்ந்து, அந்த நிறுனங்களிடம் விசாரணை நடத்தி, FAME-II திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படாத எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை திரும்பப்பெறும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு. மேலும், இதுவரை 9,89,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டதாக இதுவரை குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், அதனை 5,64,000 ஆகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. FAME-II திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2024-க்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்ட 4,00,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை விசாரணையை காரணம் காட்டி மத்திய அரசு நிலுவையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.