'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ்
மின்சார வாகனத் தொழில்(EV) குறைந்தபட்ச வரம்பை அடையும் வரை மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் அரசாங்கம் உதவ வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. "சுமார் 20% EV வளர்ச்சிக்கு ஆதரவு கிடைத்தால் அது நிச்சயமாக உதவியாக இருக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவிலும் இதே நிலை இருந்தால் நன்றாக இருக்கும்," என்று டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியின்(TPEM) தலைமை வியூக அதிகாரி பாலாஜே ராஜன் கூறியுள்ளார். "நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், சுமார் 20% EV வளர்ச்சி அடைந்தவுடன், வாடிக்கையாளர் ஆர்வம் மிகவும் அதிகரிக்கும். இது சந்தையில் போதுமான வேகத்தை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவின் புத்திசாலித்தனமான மின்சார வாகன வளர்ச்சி திட்டம்
சீனாவின் அரசாங்கம் 2009ஆம் ஆண்டு முதல் பொதுப் போக்குவரத்து, டாக்சிகள் மற்றும் நுகர்வோர் சந்தையில் EV உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளித்துள்ளது. EV சந்தை முதிர்ச்சியடைந்ததால், EV நுகர்வோருக்கான கொள்முதல் மானியங்கள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால், சீனாவில் மின்சார வாகன சந்தை வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 30% வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற இந்தியா இலக்கு வைத்திருந்தது. இந்தியாவில் வாகனப் பதிவைக் காட்டும் VAHAN தரவுகளின்படி, 2023இல் 72,321 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022இல் 32,260 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.