2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் புதிய சிட்ரன் கார் மாடல்கள்
2024-ல் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தங்களுடைய இந்திய கார் விற்பனை லைன்அப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன். புதிதாக C3X செடான் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் காரான eC3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் புதிதாகக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். தற்போது இந்தியாவில், C3, C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மற்றும் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி உள்ளிட்ட எரிபொருள் கார்களையும், eC3 என்ற முழுமையான எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் சிட்ரன் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள்:
மேற்கூறிய புதிய கார்கள் மட்டுமின்றி, இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அந்நிறுவனத்தின் எரிபொருள் கார் மாடல்களான C3 மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது சிட்ரன். இந்தப் புதிய டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை, தங்களுடைய மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் சேர்த்து வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட C3 மாடலானது, ரூ.10 லட்சம் முதலான விலையிலும், C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலானது, ரூ.14 லட்சம் முதலான விலையிலும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.