'சர்வதேச ரெட் டாஸ் டிசைன்' விருதைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த 'மான்ட்ரா எலெக்ட்ரிக்'
சென்னையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனமானது தங்களுடைய எலெகட்ரிக் சூப்பர் ஆட்டோவுக்காக, 2023ம் ஆண்டிற்கான 'சர்வதேச ரெட் டாட் டிசைன்' விருதைப் பெற்றிருக்கிறது. முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனமானது இந்தியாவின் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன சந்தைக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நுழைந்தது. தங்களுடைய எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவை இரண்டு வேரியன்ட்களாக இந்தியாவில் வழங்கி வருகிறது மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனம். தற்போது அந்த சூப்பர் ஆட்டோவுக்கே சர்வதேச ரெட் டாட் டிசைன் விருதையும் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்கும் எலெக்ட்ரிக் வாகனத்தைப் புழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என இந்த எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவோ உருவாக்கியிருக்கிறது மான்ட்ரா.
மான்ட்ரா எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ: வசதிகள்
ஒரேயொரு வைப்பரைக் கொண்ட சிங்கிள் பீஸ் விண்ட் ஸ்கிரீன், இரண்டு ஹாலஜன் முகப்பு விளக்குகள், முகப்பு விளக்குகளுடன் சேர்த்தே கொடுக்கப்பட்டிருக்கும் இன்டிகேட்டர்கள் மற்றும் கார் போன்ற ஹார்டுடாப் ரூஃபும் தேர்வாக வழங்கப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி டெயில் விளக்குகளையும், இந்த செக்மெண்டிலேயே முதல் முறையாக மூன்று சக்கரவானகத்தில் டெய்ல் கேட்டையும் வழங்கியிருக்கிறது மான்ட்ரா எலெக்ட்ரிக். இந்த எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவுக்கு 3 வருடம் அல்லது 1 லட்சம் கிமீ வாரண்டியையும் ஸ்டான்டர்டாகவே அளித்திருக்கிறது மான்ட்ரா எலெக்ட்ரிக். மேலும், இந்த சூப்பர் ஆட்டோவுக்கு ஒரு வருட சாலையோர உதவிகளும் (Roadside Assistance), கூடுதல் வாரண்டியை தேர்வாகவும், AMCயும் வழங்கியிருக்கிறது மான்ட்ரா.
மான்ட்ரா சூப்பர் ஆட்டோ: இன்ஜின் மற்றும் விலை
இந்த எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோவின் 10kW எலெக்ட்ரிக் மோட்டாருடன், ePV வேரியன்டில் 7.66kWh பேட்டரியும், ePV 2.0 வேரியன்டில் 10kWh பேட்டரியையும் கொடுத்திருக்கிறது மான்ட்ரா. இந்த பேட்டரி பேக்குகளுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 197 கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த எலெக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ. இந்தியாவில் இந்த சூப்பர் ஆட்டோவின் அடிப்படை வேரியன்டான ePV-யை ரூ.3.02 லட்சம் விலையிலும், மிட் வேரியன்டான ePV 2.0-வை ரூ.3.44 லட்சம் விலையிலும் வாங்க முடியும். இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் டாப் வேரியன்டான ePX-யும் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மான்ட்ரா எலெக்ட்ரிக். அதன் விலை ரூ.3.8 லட்சமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.