புதிய அல்ட்ராஸ் iCNG மாடலுக்கான புக்கிங்குகளைத் தொடங்தியது டாடா!
தங்களுடைய அல்ட்ராஸ் மாடல் காரின் CNG வேரியன்ட்களுக்கான புக்கிங்குகளை தொடங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். என்னென்ன வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது அல்ட்ராஸ் iCNG? இந்தப் புதிய அல்ட்ராஸை XE, XM+, XZ, XZ+ என நான்கு ட்ரிம்களில் வெளியிட்டிருக்கிறது. இதன் டாப் ட்ரிம்மில் 7.0 இன்ச் டச்ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் மூலம் இயங்கும் சன்ரூஃப், 16-இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க AC வென்ட்கள் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது டாடா. 6 ஏர்பேக்குகள், ABS, EBD மற்றும் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் ஸ்டாண்டர்டு வேரியன்டானது குளோபல் NCAP-ல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் மற்றும் விலை:
இந்த அல்ட்ராஸை முதலில் பஞ்ச் CNG-யுடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தான் அறிமுகப்படுத்தியது டாடா. 86hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் இன்ஜினை இந்த அல்ட்ராஸில் பயன்படுத்தியிருக்கிறது டாடா. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடலின் இன்ஜின் CNG மோடில் 77hp பவர் மற்றும் 97Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் விலையை டாடா இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், இதன் பெட்ரோல் வேரியன்டை விட ரூ.90,000 அதிகமான விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் புக்கிங்குகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ரூ.21,000 செலுத்தி இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி பெலினோ மற்றும் டொயோட்டா கிளான்ஸாவிற்கு போட்டியாக இதனை களமிறக்கியிருக்கிறது டாடா.