புதிய 'நியூ கிளாஸ்' எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கும் BMW
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய எதிர்கால எலெக்ட்ரிக் கார்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வகையில், முன்னோட்டமாக விஷன் நியூ கிளாஸ் (Vision Neue Klasse) கான்செப்ட் எலெக்ட்ரிக் காரை தற்போது நடைபெற்று வரும் மியூனிச் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ.
தற்போதும் பல்வேறு வாகனப் பிரிவுகளில் எலெக்ட்ரிக் கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது பிஎம்டபிள்யூ. எனினும், அவை அந்நிறுவனத்தின் எரிபொருள் கார்களின் வேற்று வடிவங்களாகவே இருந்து வருகின்றன.
எனவே, முழுமையாக வருங்காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட புதிய எலெக்ட்ரிக் கார் லைன்அப்பை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது பிஎம்டபிளியூ.
மேலும், முழுவதும் எலெக்ட்ரிக் கார்களில் மட்டுமே கவனம் செலுத்திவரும் டெஸ்லா மற்றும் BYD ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியளிக்கத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
பிஎம்டபிள்யூ
பிஎம்டபிள்யூவின் திட்டம் என்ன?
நியூ கிளாஸ் என்ற பெயரின் கீழ் அடுத்த 24 மாதங்களில் 6 புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களானது, பிஎம்டபிள்யூவின் தற்போதைய எலெக்ட்ரிக் கார்களை விட 30% அதிமான ரேஞ்சு, 30% வேகமான சார்ஜிங் மற்றும் 25% அதிக திறனைக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், இந்த எலெக்ட்ரிக் கார்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதன் விலையும் கணிசமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.
2025ம் ஆண்டின் இறுதிக்குள், தங்களுடைய உலகளாவிய கார் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு எலெக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது பிஎம்டபிள்யூ.