X1 லைன்-அப்பில் புதிய வேரியன்டை வெளியிட்டுள்ளது BMW
X1 மாடலின் 'sDrive 18i M Sport' வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ. X1 வரிசையில் மற்ற இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்ட விலையில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய வேரியன்ட். xLine வேரியன்டின் இன்ஜின் மற்றும் வசதிகளையே இந்த 18i M Sport-ல் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. எனினும், சில கூடுதல் வசதிகளையும் இந்தப் புதிய வேரியன்டில் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். முன்பக்க பயணிக்கான சீட் அட்ஜஸ்ட்மண்ட் வசதி, ஹார்மன் கார்டனால் ட்யூன் செய்யப்பட்ட சவுண்டு சிஸ்டம் ஆகியவை, இந்த வேரியன்டில் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மெர்சிடீஸ் பென்ஸ் GLA, ஆடி Q3, வால்வோ XC40 மற்றும் மினி கண்ட்ரிமேன் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்தக் காரை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
இன்ஜின் மற்றும் விலை:
xLine வேரியன்டில் பயன்படுத்தப்பட்டுள்ள, 136hp பவர் மற்றும் 260Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையே 18i M Sport-லும் பயன்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் 10.7 இன்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றை புதிய வேரியன்டில் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. iDrive இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்டராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.48.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது இந்த BMW X1 sDrive 18i M Sport மாடல் கார்.