ரூ.1.81 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது 'BMW 740d M ஸ்போர்ட்' செடான்
இந்தியாவில் தங்களது புதிய '7 சீரிஸ் 740d M ஸ்போர்ட்' லக்சரி செடான் மாடலை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த மாடலை CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த '740d M ஸ்போர்ட்' மாடலுடன், i7 M70 எக்ஸ்டிரைவ் எலெக்ட்ரிக் மாடலையும் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஏரோடைனமிக் பாடி பேன்ல்கள், உயர் தர பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உட்பக்க சீட்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகள் மற்றும் டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகிய வசதிகள் இந்த 740d M ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டிருக்கின்றன.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட்: இன்ஜின் மற்றும் விலை
இந்த லக்டரி செடானில், 286hp பவர் மற்றும் 650Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது, 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கும் இந்த 740d M ஸ்போர்ட் செடானானது, 0-100 கிமீ வேகத்தை 6 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. இந்த 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் லக்சரி செடானை, இந்தியாவில் ரூ.1.81 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. தற்போதே டீலர்ஷிப்களில் இந்த மாடலை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ள முடியும்.