
புதிய '5 சீரிஸ்' குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது BMW
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய அப்டேட் செய்யப்பட்ட 5 சீரிஸ் சொடனின் படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த செக்மண்டில் பிஎம்டபிள்யூவுக்கு நேரடிப் போட்டியாளராக இருக்கக்கூடிய E-கிளாஸ் செடானை கடந்த மாதம் தான் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்-பென்ஸ்.
தற்போது அதனைத் தொடர்ந்து புதிய 5 சீரிஸ் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த புதிய 5 சீரிஸ் லைன் அப்பில், பெட்ரோல், டீசல், எலெக்டரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என அனைத்து வகையான ஆப்ஷன்களையும் வழங்கவிருக்கிறது பிஎம்டபிள்யூ.
எந்த நாட்டில், எந்த ஆப்ஷனுக்கு டிமாண்டு இருக்கிறதோ அதனைப் பொருத்து குறிப்பிட்ட வேரியன்ட்களை குறிப்பிட்ட நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
முந்தைய வெர்ஷனை விட நீளமாக, அகலமாக மற்றும் உயரமாக புதிய அப்டேட்களுடன் களமிறங்கவிருக்கிறது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்.
பிஎம்டபிள்யூ
'5 சீரிஸ்' இன்ஜின் ஆப்ஷன்கள்:
520i, 520d மற்றும் 520d xடிரைவ் ஆகிய மாடல்களை சர்வதேச சந்தையில் வெளியிடவிருக்கிறது பிஎம்டபிள்யூ. அதனைத் தொடர்ந்து 530e மற்றும் 550e xடிரைவ் பிளக்-இன் ஹைபிரிட் மாடல்களை ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடவிருக்கிறது.
தொடக்கநிலை 520i-ல் 205hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ இன்ஜின் பயன்படுத்தப்படவிருக்கிறது. 197hp பவருடன் கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜினை 520d-யிலும், ஒட்டுமொத்தமாக 299hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டரை 530e பிளக்-இன் ஹைபிரிட்டிலும் பயன்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
இவை தவிர கூடுதல் பவரைக் கொண்ட 530i மற்றும் 540i ஆகிய ஆப்ஷன்களையும் சில நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
இந்தியாவில் மெர்சிடீஸ்-பென்ஸைின் E-கிளாஸைப் போல லாங் வீல்பேஸ் கொண்ட 5 சீரிஸையே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.