மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ!
ஆஃப்ரோடு எஸ்யூவி ஆர்வர்களின் கனவு கார் என மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG மாடல் காரை சொல்லலாம். தற்போது ரூ.3.30 கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது இந்தக் கார். ஆனால், இந்தியாவில் இந்தக் காருக்கு இருக்கும் மவுசு காரணமாக பலரும் தங்களுடைய எஸ்யூவிக்களை G63-யைப் போல மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். போபாலில் உள்ள கார் மாடிஃபிகேஷன் கடையைச் சேர்ந்த ஒருவரும் தன்னுடைய 2005 மாடல் டாடா சுமோவை G63-யைப் போல மாற்றியிருக்கிறார். இந்த காரின் வீடியோ யூடியூபில் பகிரப்பட அது நெட்டிசன்களிடையே வைரலாகியது.
டாடா பென்ஸ் G63:
மெர்சிடீஸ் பென்ஸ் இல்லை, இது டாடா பென்ஸ். முன்பக்க முகப்புவிளக்கில் தொடங்கி, பின்பக்கம் டெயில்லைட் வரை அனைத்து பாகங்களையும் பென்ஸ் G63-யைப் போலவே மாற்ற முயற்சித்திருக்கிறார் அந்த நபர். இதற்காக சில பாகங்களைத் தனித்துவமாகவும் உருவாக்கியிருப்பதாக அந்தக் காணொளியில் குறிப்பிட்டிருக்கின்றனர். G63-யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எல்இடி மற்றும் எல்இடி டிஆர்எல்லையே மாற்றம் செய்யப்பட்ட காரிலும் பயன்படுத்தியிருக்கின்றனர். இது ஓரளவுக்கு G63-யின் தோற்றத்தைக் கொண்டு வர உதவியிருக்கிறது. பெர்ஃபாமன்ஸ் வகையில் எந்தவொரு மாற்றத்தையும் கார் உரிமையாளர்கள் செய்யவில்லை. இந்த மாற்றங்களுக்காக சில லட்சங்களைச் செலவு செய்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ, சிலர் இது பணத்தை விரையமாக்கும் செயல் எனத் தெரிவித்திருக்கின்றனர்.