ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்
ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாட்டில், 'NEV's, மொப்பட்ஸ் மற்றும் பைக்ஸ்' பிரிவில் சிறந்த தயாரிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறது பெங்களூருவச் சேர்ந்த 'விங்க்ஸ் EV' நிறுவனத்தின் தயாரிப்பு. சிறிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான நிகழ்வாக நடைபெற்று வருகிறது மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாடு. இந்த மாநாட்டில் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான விங்க் EV, தங்களது ஃப்ளாக்ஷிப் தயாரிப்பான 'ராபின்' மைக்ரே காரை அறிமுகப்படுத்தியது. முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மைக்ரோ காரை, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது விங்க்ஸ் EV நிறுவனம். இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய வகையிலான காம்பேக்ட்டான நான்கு சக்கர வாகனமாக இதனை உருவாக்கியிருக்கிறது விங்க்ஸ் EV.
ராபின் மைக்ரோ கார்:
பெயரளவில் கார் எனக் கூறினாலும், ஒரு பைக்கின் நீளம் மற்றும் அகலத்தையே கொண்டிருக்கிறது இந்த ராபின் மைக்ரோ கார். ஒரு பைக்கை பார்க் செய்ய தேவைப்படும் இடத்தில் இந்தக் காரையும் பார்க் செய்து விட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது இதனை தயாரித்த விங்க்ஸ் EV. அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்லும் இந்த மைக்ரோ காரானது 90 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. ஒரு இரு சக்கர வானகத்தின் பயன்பாட்டு அனுபவத்துடன் கூடிய நான்கு சக்கர வாகனமாக இந்த மைக்ரோ கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காரின் சொகுசு வேண்டும், ஆனால் நகரத்திற்கு பயணிப்பதற்கும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பவர்கள் இந்த மைக்ரோ கார் வெளியான பின்பு கண்டிப்பாக பரிசீலனை செய்து பார்க்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.