ஜனவரி 9-ல் அறிமுகமாகிறது புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரீமியம் வேரியன்ட்
2024ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி மாதம் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டிசைனிலும், மெக்கானிக்கலாகவும் பல்வேறு பெரிய மற்றும் முக்கியமான மாற்றங்களைப் பெறவிருக்கிறது புதிய சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். கடந்த மாதம் தான், சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பன் வேரியன்டின் அப்டேட் செய்யப்பட்ட வடிவத்தை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். தற்போது அதனைத் தொடர்ந்து, அதன் டாப்-எண்டான ப்ரீமியம் வேரியன்டின் அப்டேட் செய்யப்பட்ட வடிவத்தை ஜனவரி 9ம் தேதியன்று அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது பஜாஜ். சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பன் வேரியன்டை விட ப்ரீமியம் வேரின்டில் பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட சில புதிய வசதிகளை அளிக்கவிருக்கிறது பஜாஜ்.
பஜாஜ் சேட்டக் ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: வசதிகள்
முன்னதாக சேட்டக் ப்ரீமியம் வேரியன்டில் பயன்படுத்தப்பட்டு வந்த 2.88kWh பேட்டரிக்குப் பதிலாக, புதிய 2024 சேட்டக் ப்ரீமியம் மாடலில் சற்று பெரிய 3.2kWh பேட்டரியைப் பயன்படுத்தவிருக்கிறது பஜாஜ். கூடுதல் பேட்டரி பவருடன், ரேஞ்சும் 113 கிலோமீட்டரில் இருந்து 127 கிமீ ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், 4.30 மணி நேரத்தில் 0% முதல் 100% வரை இந்தப் புதிய அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஆகிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிவிஎஸ் iக்யூப், ஏத்தர் 450X, சிம்பிள் ஒன் மற்றும் ஓலா S1 ப்ரோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்படவிருக்கும் சேட்டக் ப்ரீமியம் மாடலானது, அதிகபட்சமாக 73கிமீ வேகத்தில் செல்லும் திறனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.